Tuesday, February 25, 2014

ஆசிவகம் 4

ஆசிவக மாயை
 
கடந்த மாதம் மாநிலக் கல்லூரியில் மணிமேகலையில் சமயமும் மெய்யியலும் என்ற கருத்தரங்கில், மணிமேகலை காலத்துச் சமணம் என்ற தலைப்பில் பேசினேன். அங்கு மணிமேகலை எடுத்துரைக்கும் ஆசிவகம் என்ற தலைப்பில் பேரா.க.நெடுஞ்செழியன் அவர்கள் ஆசிவகக் கருத்துக்களை தொகுத்துரைத்தார். அதன் தொடர்ச்சியாக எழுந்ததுதான் இக்கட்டுரை.

 
 
 (என் மற்ற ஆசிவக கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரையைப் படிக்கலாம். ஆசிவகம் 3 - http://banukumar_r.blogspot.in/2006/11/3.html )
 
வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூல், வெகுநாட்களாக கிடைக்காமல், இந்த பொத்தகக் கண்காட்சியில் (இராம்கி ஐயாவின் குறிப்பு) முதலாம் பதிப்பை வாங்கினேன். வாங்கியகையோடு படிக்க ஆரம்பித்த நூலும் இந்நூல்தான்.

முதலில் ஒன்று, வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூலின் பெயருக்கும் திருக்குறளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

ஆசிவகம் என்னும் மாயை

வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூலின் ஆசிரியர் திரு.குணா. அவர் என்றில்லை, ஆசிவகத்தை ஆதரித்துப் பேசுவோரும், எழுதுவோரும் நினைவில் நிறுத்தத் தவறியக் குறிப்புகளை அல்லது கருத்துக்களை வாசகர்ப் பார்வைக்கு வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். ஆசிவகம் பற்றி ஆராயும் பலரும் கவனிக்கத் தவறியதை, இவரும் கவனிக்காமல் விட்டுவிட்டார். சில அடிப்படைப் புரிதல்கள் இல்லாமல் இவர் கட்டும் கட்டிடங்கள், சீட்டுக்கட்டு கட்டிடங்களாகத்தான் திகழ முடியும். அவை கவைக்கு உதவாது.
இது வள்ளவத்தின் வீழ்ச்சி என்ற தனி நூல் பற்றிய விமர்சனம் என்ற நிலையில் என் கருத்தை பதிய விழையவில்லை. ஒட்டுமொத்த ஆசிவக ஆதரவாளர் யாராகயிருந்தாலும் அவர்கள் அனைவரிடமும் வினவும் கேள்விகளாக இவற்றை பார்க்கவேண்டுகிறேன்.
கேள்விகள்

1. ஆசிவகம் என்ற சொல்லுக்கு நேரிதன் பொருள் என்ன?  - ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் தங்கள் மனத்திற்கேற்பப் பொருள் கொள்கிறார்கள். ஆசிவகம் என்பதற்கு ஆசு+ஈவு+அகம் என்றெல்லாம் பொருள் கூறுகிறார்கள்.
 
 
2. சிலப்பதிகாரக் காலத்திற்கு முன் ஆசிவகம் என்ற சொல்லாட்சி, எங்காவது பயலப்பட்டு வந்ததா? வந்தால் அதற்கான தரவுகள் என்ன?

3. ஆசிவகத்தின் மூல நூல் என்ன? அவற்றைப் பற்றியக் குறிப்புகள் அல்லது உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட பாடல்கள்/செய்யுள்கள் உள்ளனவா?


4. சமணம் என்ற பாகத/சங்கத சொல் தமிழில் அமணம் ஆகும். அமணம் என்பது தமிழ்நாட்டில் ஆசிவகத்தைக் குறிக்கும் என்று கருதுபவர்கள், அமணம் என்ற “தமிழ்” வார்த்தை பாகத/சங்கத மொழிக்கு செல்லும்போது “சமணம் என்று புணருமா? அப்படிப் புணர்ந்தால் அதற்கு சங்கத (பாணினியார்) இலக்கணப்படி பொருத்திக் காட்ட முடியுமா?

5. ஆசிவகத்தின் மூல நூல் தமிழில் இல்லை! அழிந்துவிட்டது என்றால் மற்ற மொழிகளில் வழங்கிவரும் ஆசிவக நூற்பட்டியல் என்னென்ன?

6. ஆசிவகம் என்ற சொல்லாட்சி தமிழகக் கல்வெட்டுக்களில் ஆளப்பட்டுள்ளதா?

7. குணா அவர்களின் கருதுகோள்படி, ஆசிவகம் என்ற பெயர் ஆசிவக எதிர்ப்பாளர்களால் கொடுக்கப்பட்ட சொல். அப்படியென்றால், ஆசிவகத்தின் உண்மை அல்லது இயற்பெயர் என்ன?

8. குணா அவர்கள் மணிமேகலையிலும், நீலகேசியிலும், சிவஞானசித்தியிலும் கூறப்படும் ஆசிவகக் கருத்துக்கள் பொருந்தாதவை என்கிறார்? பொருந்தாது என்று எடுத்துக்கொண்டால் ஆசிவகம் என்னும் இருப்பை ஏற்றுக் கொள்ள உதவும் நூற்கள் என்ன?

9. ஆசிவகக் கொள்கையின் நிறுவனர் யார்? மற்கலி கோசரா? அல்லது அவருக்கு முன்னமே யாரும் இருந்தனரா?
10. தென்னகத்தில் தமிழகத்தைத் தவிர்த்து, ஆந்திர, கன்னட தேசத்தில் ஆசிவகக் கருத்துக்கள் உள்ளனவா? நூல்கள் இருந்தனவா?
மேலே கேட்கப்பட்ட கேள்விகள் உண்மையில் சிந்திக்கவும் அல்லது அறியப்படவும் கேட்கப்பட்ட கேள்விகள்.  ஆசிவகம் பற்றி ஆராய்வோர் நிச்சயம் தெரிந்துக் கொள்ள, சிந்திக்க வேண்டியக் கேள்விகள் தான் இது.


இரா.பானுகுமார்,
சென்னை

2 comments:

வெற்றிவேல் said...

ஆசிவக மதத்தாரின் நூலின் பெயர் நவகதிர், ஆதித்யம் அய்யா. இரண்டுமே அழிந்துவிட்ட நூல்கள்...

மற்கலியை தமிழில் பூரணர் என்பர்...

Kaarti Keyan R said...

மகா பாகவதத்தில் திராவிட அரசன்-னு ஒரு பேர் வருது??? அந்த திராவிடர் யார்??? அந்த சொல் எப்படி வந்தது??? அது யாரைக் குறித்தது??? அப்படி குறிபிடப்பட்டவர்கள் இன்றைய நிலையில் யார் யார்??? அவர்கள் அப்படி குறிப்பிட்ட காலத்தில் அந்த குறிப்பிடலுக்குள் வந்தவர்கள் தங்களை என்னவென்று அழைத்துக்கொண்டனர்??? அதற்க்கான ஆதாரம் என்ன???